Wednesday, April 20, 2016

எதுவுமில்லை இதுவரையில்

மார்தட்டிச் சொல்வதற்கு
எதுவுமில்லை இதுவரையில்
மானம் சூடு சொரணைக் கூட
தொடர்ந்ததில்லை எம்மிடையில்...

கூறுபோட்டு திண்பவர்க்கும்
மாலைப் போட்டு ஆதரித்தோம் …
சோறு போட்ட குலமகளை
சோக நீரில் தினம் நனைத்தோம் ….

காடு மலை முழுவதுமே
கால் பதித்து நாம் உழைத்து
ஏடுகளில் உயர்ந்தவரின்
இயன்றளவு சுகம் காத்தோம் …..

ஒன்றிரண்டு விதிவிலக்காய்
தண்டவாளம் தாண்டிடினும்
சொந்த மண்ணின் நிழல் மறைத்து
சொர்கபூமி நிலை மறப்பர்

மந்த மண்ணின் தரம் மாற்ற
வந்தவர்கள் மாறி மாறி
மலையகத்தை பாவம் என
உரைக்கையிலே வலிக்கிறது …

நாடு பார்க்கும் மன்றத்தில்
நம்மவர்கள் சண்டையிட்டு
நாரிப் போன நிலைக் கண்டு
நாய்கள் கூட சிரிக்கிறது

சிங்க ரத்த வீரரெல்லாம்
சிறிது காலம் ஓய்வெடுத்து
சங்கம் கொண்டு புதிதாக
சத்தமிடுதல் கொதிக்கிறது …

எங்களுக்கும் ரத்தம் உண்டு - எனும்
உண்மை நன்கறிந்தும்
கூச்சலிடும் கேலிகளை
நினைக்கையிலே வெறுக்கிறது …

வடகிழக்கும் மலையகமும்
வேறான வரலாற்றை எழுதியது
யார் என்று உணர்விருந்தால்
புரிந்துவிடும் …..

கூட உள்ள நரிகளையே
கும்பிட்டு வணங்கையிலே
கோபுரமாய் தமிழ் காக்கும்
கூட்டை நாங்கள் கலைப்போமா....

சம்பளப் பேச்சை சந்தி சிரிக்க வைத்து
பொம்பள தலைவர்கள் களியாட்டம் கொள்ளும்
வரலாற்று கொடுமைகள் தலைவிரிக்க கண்டும்
எமக்காக எவரும் குரல் கொடுக்க நினைக்கலயே...

போர் மூளும் காலத்தில் கண் ணீர் மூழ்கி
மலையகமே மொழிக் காரன் தவிப்பினை
மனம் முழுதும் நிறைத்து துவண்ட
கதை சொல்வதற்கு வழியின்னும் தெரியலயே...

வெளிநாட்டுத் தமிழர்க் கெல்லாம்
வடகிழக்கே தமிழ் ஈழம்...
மலையகத்து தமிழரெல்லாம்
அடிப்பட்ட நீர்க் கோலம் …

சத்தியமாய் சொல்கின்றோம்
வடகிழக்கு தமிழினமே
உமை நெஞ்சில் வைத்து இதுவரையில்
சுமந்த கதை பொய்யில்லை …

முட்டி மோதி மலையகமும்
முன்னேறத் தொடங்கி விட்டோம்
நமை நாமே பிரிக்காமல்
கை கோர்த்து பறந்திடுவோம் ….

எதற்காக புலம்பல் என்று
எனை நீங்கள் கேட்டாலும்
பதில் சொல்ல வழியில்லை

எதையோ சொல்ல வந்தேன்
என்னென்னமோ சொல்லி விட்டேன்

சொன்னதெல்லாம் சரியென்று வாதாட வரமாட்டேன்
தாள் எடுத்து கிறுக்கையிலே வந்ததெல்லாம் பதிவிட்டேன்

No comments:

Post a Comment