தலை நகரில் தலை நிமிர்ந்த
மலைத் தாயின்
பிறவிகளே.........
கடல் கடந்து
வியர்வை சிந்தும்-என்
கிராமத்துப் பறவைகளே...

உங்கள் ஊர்க் குருவியின்
புலம்பலையும்
ஒரு நிமிடங்கள் கேளுங்கள்....
நீங்கள் வசித்த
அந்த ஆலயத்திற்கு
கீழே உள்ள லயத்தில்
தொங்க வீடுதான்
நானும் …
கவ்வாத்து வெட்டும் போது
விரல் கழிந்து வீசுப்பட்டதும்
கான் வெட்டும் போது
கால் கிழிந்து கதறியதும்
என் அப்பாதான்....
நீங்கள் வசித்த
அந்த ஆலயத்திற்கு
கீழே உள்ள லயத்தில்
தொங்க வீடுதான்
நானும் …
கோவில் திருவிழாக்
கூட்டத்தில் கணக்கு கேட்டு
கலவரம் செய்த
குமாரின் தம்பியை
ஞாபகமிருக்கிறதா..
அது நான் தான்...
கொழும்புத் தெருக்களில்
குத்துமதிப்பாக ஒரு தோட்டப்
பொடியனை காட்டச்
சொன்னால்
என்னைத்தான் காட்டுவார்கள்....
இப்போதும் புரியவில்லையா
உங்களுக்கு புரியும்
படியாகவே சொல்கிறேன்
கண்களை மூடி
காட்சிப் படுத்திப்
பாருங்கள் புரிவேன்...
வீட்டுக்கு பணமனுப்ப
சீட்டுக்கு உயிர்க் கொடுக்க
எழுதத் தெரிந்தவர்களின் பின்னால்
அப்பாவியாய் கண் சிமிட்டிக் கொண்டு
வங்கி மூலையில் தங்கி நிற்கிறானே
அது வேறு யாருமல்ல நான் தான்...
குடும்ப சுமை ஏந்த
கொழும்பு வந்து
வியர்வை சிந்தும்
என் ஆருயிர்
அண்ணன் மார்களே உங்கள்
உடன் பிறந்த தம்பியின்
குரலாக கேட்டால்
என் உரைக் கேளுங்கள்..
கடல் கடந்து
உடல் தொலைத்து -என்
உடன் உயிர்த்த
உறவுப் பூக்களே
உங்கள் கடைக் குட்டியின்
கதறாலாக
நினைக்க முடிந்தால்
என் கவிக் கேளுங்கள்...
நீங்கள் நினைப்பது போல் நாம் இல்லை
உங்கள் கற்பனை போல் இவ்வூர் இல்லை...
சித்திரை தீபாவளிக்கு
திருவிழாவிற்கு
நீங்கள் ஊருக்கு வரும் போது
இருக்கின்ற ஊர்
இல்லை
நிஜமான இவ்வூர்...
பத்திரிக்கை
டிவிகளில்
பளிச்சிடும்
நவீன ஊர் இல்லை
நடைமுறையில்
நம்;மூர்...
நீங்கள் நினைப்பது
போல் நாம் இல்லை
உங்கள் கற்பனை போல்
இவ்வூர் இல்லை...
பத்து பேருக்கு
பாராளுமன்ற பாதைக் காட்டி
செத்துக் கிடக்கிறது
நம் செம் மண் வீதி
சித்து விளையாட்டு
காலம் போல் சின்னா பிண்ணமாய்
சிதறிக்கிடக்கிறது
நம் பசும்பொன் பூமி...
பச்சை பச்சையாய்
காட்டும் தேயிலை படம்
எல்லாம் பச்சைப் பொய்...
ஆசிய வங்கியில்
மானியம் வாங்கி
மரங்கள்
நட்டு விற்கிறார்கள்
இதுதான் மெய்...
கொச்சைத் தமிழில்
திட்ட நினைக்கிறது
நம் கல்விக் கூடத்தை -அரசியல்
பிச்சை எடுக்கும் பைத்திய
அமைப்பாய் நடாத்தும்
கூத்தை
கள்ளச் சாராயம்
கள்ளுத்தண்ணீர்
அழிந்துவிட்டதாய்
கதை கட்டுகிறார்கள்
இல்லை அண்ணா –
ஓரிரு சுய நல தமிழனால்
இலை குலைகளாய்
மாறி இளசுகளின்
இதயம் அறுக்கிறது
இதுவும் மெய்.....
நம்மூரை நானே
கேவலப்படுத்துவதாய்
என்னாதே உறவே -என்
கண்ணீரை துடைக்க
உன்னை விட்டால்
யாருண்டு எனக்கே...
தேயிலை சமூகத்தின்
ஆயிரம் மாணவரில்
பல்கலைகழக படிதனை
ஒருத்தனேனும் மீதிக்கிறானா
என்பது கேள்விக் குறியாய்
இழுக்கும் போது
கண்ணிர் விடாமல்
என்ன செய்ய சொல்கிறாய்....
தனது 30 வருட வியர்வையின்
மூச்சாய் மிஞ்சிய
ஈபீஎப் இதழ்களை
30 நாட்களில்
முடித்துவிட்டு
கை காசுக்கு
கையேந்தி நிற்பதை
பார்த்து
கண்ணீர் விடாமல்
என்ன செய்ய சொல்கிறாய்....
பக்கத்து வீட்டுக் காரனே
படித்துவிடக் கூடாதென்று
பாட்டு சத்தத்தை பரப்பி
வரட்டு சுகம் கண்டு
பரம்ரையையே படுகுழியில்
தள்ளும்
நம் மச்சான் மாமன் நண்பனைப்
பார்த்து கண்ணீர் விடாமல்
கை வைக்க சொல்கிறாயா.....
நீங்கள் நினைப்பது
போல் நாம் இல்லை
உங்கள் கற்பனை போல்
இவ்வூர் இல்லை...
மகுடிக்கு மயங்கிய
நாகங்களாய் மண்டியிட்டு
பைத்தியகார பாம்பாட்டிகளுக்கு
போஸ்டர் ஒட்டி
பெருமிதம் கொள்ளும்
நம் நெருங்கிய சொந்தங்களைப்
பார்த்து கண்ணீர் விடாமல்
வேறென்ன
செய்வதென்று நானறியேன் …
சோகத்தை சொல்லச் சொன்னால்
சொல்லிக் கொண்டெ போவேன் ..
ஆனால் நீ வேலைக்கு போகனுமே
இதை மட்டும் கேட்டுவிட்டு போ…..
யாராவது செய்வார்கள்
என ஏங்கியது போதும் அண்ணா
நியாவது வா என்னுடன்
நிலைக் குலைதல் செய்வோம்
எப்படியோ போகட்டும் என
ஒதுங்கியது போதும் அக்கா
தம்பியோடு சேர்ந்து
ஒரு சரித்திரம் படைப்போம் …
நம்க்கென்ன நமக்கென்ன
என நழுவியது போதும் நண்பா
என் பின்னே வா ஒருப்
புதுப் படை படைப்போம் ...
குறைகளை ஓதிய
துதிகள் முடிப்போம் .மனக்
குமுறல்கள் கோபமாய்
கவியினில் தொடுப்போம்
விதிகளை ஏசிய
காலங்கள் உடைப்போம்
நதிகளை படைக்கும்
கர்வத்தை படைப்போம்......
சிலைகளை தொட்டு
பணிந்தது போதும்.. நாமே
சிலைகளாய் மாறி
பணி புரிந்ததும் போதும்...
அலைகளாய் பாய்ந்து
கரைகளை தொடுவோம்....
ஆருயிர் தொடுத்து
குறைகளை கொல்வோம்...
நூற்றாண்டுக் கனவை
நொடியினில் காண்போம்
நுண்ணறிவுக் கொண்டு
சதியினை சாய்ப்போம்...
கூட்டாக சேர்ந்து
கொடுமைகள் தீர்ப்போம்-நம்மை
போற்றாத பாரை
சுடுவதாய் சேர்ப்போம்...
காற்றோடு கலக்கும்
காணங்கள் இசைப்போம்....
கண்ணீரை மாற்றி
பானங்கள் படைப்போம்....
ஊற்றான நீர் வளத்தை....
குப்பிக் கொண் டைப்போம்
மாற்றாக மலையகத்தில் - பல
மாயங்களை திணிப்போம்....
தொல் பொருளாய் நம்மை
தோண்டுவாரை தாண்டி
பல் கலைகள் கற்று
பாய்ந்து முன்னே செல்வோம்....
சொல் பேச்சில் நம்மை
சொந்தமாக்கும் குழுவை
கல்லெறிந்து விரட்டி- புதிய
கதிரைகளை செய்வோம்....
நம்மை சுற்றி குவிந்திருக்கும்
நவீனங்கள் தொடுவோம்....
நம்மையொதுக்கி படைக்கவில்லை
நமக்கும் என்று உணர்வோம்....
செம்மை செய்து நம் கனவை
இன்னோர் துனைக் கொள்வோம்....
இம்மை முடிவு பெருவதற்குள்
இழந்த மரணம் கொள்வோம்....
தலையை யாட்டும் பதுமைகளாய்
கொண்ட பாதை மறப்போம்.... நம்மை
விலைகள் பேசி விற்றவர்கள்
விலாசம் தேடி யலைவோம்... நம்
நிலையை மறந்து மாடுகளாய்
நடிக்கும் மனிதரை வெறுப்போம்.... வெற்றி
வலையை வீதி வானத்தில் பண
நட்சத்திரங்கள் பிடிப்போம்....
மதுவில் வாழ்ந்து தாழ்ந்த – நம்
மடமை கூர்ந்து நினைப்போம்....
பொதுவில் நம்மை முதலில்
மனிதர்களாக்கி தொடர்வோம்
தெருவில் பேசும் வீரம்
தெறிக்கும் அலையாய் உரைப்போம்
சரிவில் தொங்கும் கொடியை
சரிபடுத்தி நிமிர்த்தி தொடுப்போம்.....
ஏடுகள் யாவையும்
புலம்பல்கள் நிறைத்ததால் - மண்
புளுக்களாகிப் போனோம்.....
காடு(கள்) குள்ளயே
கண் வைத்து திரிந்ததால் - நிஜ
கடமைகள் மறந்தோம்......
கோடுகள் போட்டு
நியாயமாய் வாழ்ந்து
கொண்டதை இழந்தோம் - மாற்றி
கூடுகள் பாய்ந்து
குள்ள நரிகளாய் - புது
கோபுரம் செய்வோம்....
கண்ணீர் மழையில்
காகிதம் மடித்து
ஓடம் அனுப்பிய
ஓய்வினை முடிப்போம்... மாறாய்
மண்நீர் மறைத்து
மார்பினில் பிடித்து
செந்நீர் பிரிக்கும்
செயல் முறை வெல்வோம்....
கூட்டத்தை கூட்டி
கொடுங்கோல் எழுப்பும்
குரல்களை நெறிப்போம் - இந்த
மாற்றத்தை எழுதி
செவிகளுக்குள்ளே
மடமைக்கு திணிப்போம்....
இல்லை இல்லை
இல்லை யென்றி
இழிவினை யொதுக்கி – நம்
முல்லை நில
செம்புலத்தின்
செம்மைகள் யுரைப்போம்
வெள்ளை கூட்டம்
தீட்டி வைத்த
கால சித்திரம் - அதன்
எல்லை யுடைத்து
ஏறி மிதித்து நமக்கே
நாமொரு
மந்திரம் செய்வோம்....
சேர்த்தால் இரும்பாய்
சேர்க்கச் செல்வோம்
அன்றேல்
செத்து மடிந்து
போவோம் என்போம்....
குமிழ் கூடாய்
தேசியத்தில்
கூடு கட்ட இயலாதென்போம்....
தழிழ் அரசியல் கோட்டைகள்
உள்ளே இருட்டாய்
வெளியே வெளிச்சமாய்
பாசாங்கு செய்யட்டும்.....
தமிழ் அரசியல் தலைவர்கள்
இல்லா கதைகளை
எல்லா இடத்திலும்
ஓடி திரியட்டும்....
மலையக சாம்ராஜ்யத்தை
மறு முறை செய்வோம்
இளைய தலை முறையை
இணைத்து இடிப்போம்.....
மத்திய அரசின்
மார்பினை பிடித்து
சத்திய படையாய்
சாட்சாத் எழுவோம்....
மலையக இளைஞர்களே
இது அழைப்பு அல்ல
கட்டளை
எண்ணி 5 வருடத்தில்
எட்ட முடியாத உயர வளர்ச்சிக்கு
ஏணி வைப்பது நிச்சயம்
என்பதை யுரைப்போம்...
உலகம் முழுதும்
பரந்த விரிந்த
மலையக உறவுகளே ….
தயவு செய்து
தான் பிறந்த தோட்டம் பற்றி ஒரு
நிமிடம் நினையுங்கள்
அது போதும் எனக்கு ….
அருண்வெங்கடேஷ்

No comments:
Post a Comment