![]() |
இரவும் பகலும் உழைத்த எம்மை
அழிவின் நடுவில் அமர்த்திய
உலகமே...
வறுமை கொடுமை உரிமையென்று -சில
நிலமை மட்டும் நீட்டியுரைத்த
புலமை கொண்ட போற்றி
திலகமே...
எமக்கும் உண்டு சில மகத்துவங்கள்...
எங்களுக்கும் உண்டு சில உயர்க் குணங்கள்...
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே
உழைப்பில் உண்ண கடல் தாண்டிய
உன்னதங்கள் நாங்கள் …
திரண்டு விரிந்த காட்டு மலைகளை
வியர்வை ஊற்றி குறிஞ்சாய் மாற்றிய
பொற்கரங்கள் நாங்கள் …
கொத்தடிமை கூலிகளாய் கொடுமைகள் கண்டும்
விட்டெறிந்து வீசாமல்
தமிழ் காத்த தமிழர்கள் நாங்கள்....
சொத்து சுகம் சொர்க்கம் என்று
பித்துக் கொண்டலையாத
புற்றீசல் வாழ்கைதனை புரிந்தவர்கள் நாங்கள் …
தாத்தா பாட்டி வாங்கிய சாப்பாட்டு கடன்களை
சந்தா கட்டி அடைத்துவரும்
நாணய வாதிகள் ….
எப்போதோ வாங்கிய எள்லளவு உதவிக்கு
இப்போதும் புள்ளடி வழங்கும்
நம்பிக்கை வாதிகள்...
ஒருத்தர் வீட்டில் மரணமென்றால்
மொத்த ஊரும் கண்ணீர் விடும்...
ஒருத்தன் மகன் உயர்வை கண்டால்
சொத்தாய் ஊரே உயர்த்திக் கொள்ளும்...
இன்னும் சொல்ல சொல்ல கதையிருக்கு
சொல்லிக் காட்ட தேவை யில்லை யென்ற காரணத்தால்
இத்தோடு நிறுத்துகிறேன்...
அத்தோடு இன்னொன்றும் சொல்லுகின்றேன்....
அடிமையென்று நீங்கள் சொல்வதை
நாங்கள் பணிவு என்று நினைத்திருந்தோம்
மடமை யென்று நீங்கள் வர்ணிப்பதை
நாங்கள் விசுவாசம் என்று புரிந்திருந்தோம் ….
இப்போதுதான் புரிகிறது
எங்கள் பணிவையும் விசுவாசத்தையும்
எல்லோரும் அறியாமை என்று அடையாளமிட்டிருப்பது …
இதோ எங்கள் அறிவினையும் இனி அடையாளப்படுத்துகிறோம் .

No comments:
Post a Comment